ராஜபக்சர்களின் நிலையை அம்பலப்படுத்திய எதிரணி எம்.பி
நாட்டை அபிவிருத்தி செய்வதில் ஸ்ரீலங்காவின் ராஜபக்ச மும்மூர்த்திகளுமே தோல்வி கண்டுள்ளதாகவும், எனவே குடும்ப ஆட்சியொன்றுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டில் நெருக்கடியை உருவாக்கியவரான பசில் ராஜபக்ச, அந்த நெருக்கடிக்கு தீர்வை வழங்குவார் என்ற மிகப்பெரிய போலி ஊடக பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர்,
ராஜபக்ச ஆட்சி ஆரம்பமான காலத்தில் மஹிந்த ராஜபக்ச நாட்டை முன்னேற்றுவார் எனக் கூறினார்கள். அவரின் தோல்வியையடுத்து கோட்டாபய ராஜபக்ச சுபீட்சமான நாட்டை உருவாக்குவார் என்றனர். தற்போது அவரும் தோல்வியடைந்துள்ளதால் பஷில் ராஜபக்சவை கூறுகின்றனர். ஆனால் அவராலும் எதனையும் செய்துவிட முடியாது.
பஷில் ராஜபக்ச பிறந்த நாள் முதல் அமெரிக்காவின் - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாழ்ந்து தற்போது இலங்கையின் நிலைமையைக் கண்டு, இங்கு வருகை தந்து நிலைமைகளை மாற்றக் கூடிய மாயாஜாலக்காரர் அல்ல. காரணம் பொதுஜன பெரமுன ஆட்சி ஆரம்பித்த நாள் முதல் அவரே இந்த அரசாங்கத்தை நிர்வகித்தார்.
கொரோனா பரவல் ஆரம்பித்த போது இரு ஜனாதிபதி செயலணிகளை நியமித்தார். அந்த இரு செயலணிகளின் செயற்பாடுகளுமே வெற்றிபெறவில்லை.
உண்மையில், மஹிந்த, பசில் மற்றும் கோட்டாபய மூவரும் தோல்வியடைந்துள்ளனர். சமல் ராஜபக்ச, சஷேந்திர ராஜபக்ச, நமல் ராஜபக்ச, நிபுண ரணவக்க ஆகியோரின் குடும்பங்கள் தோல்வியடைந்துள்ளன.
அவர்கள் பின்பற்றும் சமூக-பொருளாதாரக் கொள்கை, நிர்வாகக் கொள்கை மற்றும் அவர்களின் தலையீடு ஆகியவை தோல்வியடைகின்றன.
இதுபோன்று, தோல்வியுற்ற தலையீடுகளுக்கு மத்தியில், வெற்றிபெற பசில் ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என ஒரு பெரிய ஊடக பிரசாரம் காணப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் இந்த நெருக்கடியை உருவாக்கியவர்கள் மற்றும் அதிகரிப்பவர்கள். மாறாக தீர்வு காண்பவர்கள் அல்ல. அத்தகைய குடும்பத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமா என்பதையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நெருக்கடியை உருவாக்கியவர்களிடமிருந்தும், அதை அதிகப்படுத்துபவர்களிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்குமா என்பது தொடர்பில் சிந்திக்குமாறு நாட்டின் குடிமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.