கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!
இந்த வருடம் வரவு செலவுத் திட்டத்தில் கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி
“சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான விசேட வேலைத் திட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் வசதிகளை மேம்படுத்த ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
09 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 34 ஆயிரம் மில்லியன்களுக்கும் அதிகமான தொகையில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து எதிர்வரும் வருட இறுதிக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்யவுள்ளோம்.
குறிப்பாக வடக்கு, வடகிழக்கு, ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களில் மேலும் சுமார் ஏழாயிரம் மில்லியன்கள் செலவில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவுள்ளோம்.
முன்பள்ளி முதல் பாடசாலைகள் வரை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய மாகாணங்களிலும் இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |