சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : 10 பேர் பலி
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (12) பிற்பகல் 2.55 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுரங்கப்பணிகள் நிகழ்ந்துகொண்டு இருந்த போது, திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேரின் நிலை அறிய முடியாததாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு வெடிப்பு
இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
"நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாகவே அந்த இடத்தில் விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விபத்தின் போது, சுரங்கத்தில் 425 பேர் வரை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது."
சுரங்க விபத்துகள்
விபத்து நிகழ்ந்ததில் இருந்து இதுவரை 380 பேர் வரை அங்கிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
வழக்கமாகவே சீனாவில் சுரங்க விபத்துகள் அதிகமாக இடம்பெற்று வந்தாலும் அண்மைய ஆண்டுகளில் இவ்வாறான விபத்துக்களின் போது பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறாப்படுகிறது.
நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகளவில் சீனா முன்னிலை வகிக்கின்ற போதிலும், அபாயகரமான மற்றும் அடிக்கடி நிகழும் சுரங்க விபத்துகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.