காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் வீதியோடு பறிமுதல்
சம்மாந்துறையில் காவல்துறையினரின் திடீர் சுற்றிவளைப்பின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் காவல்துறையினரால் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கைகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்மாந்துறை காவல் நிலையப் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினரால் நேற்று (01-09-2026) இத்திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பிரதிப் காவல்துறை அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட காவல்துறை அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது.

மேலும் கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில் காவல்துறையினர் இக்கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, பிரதான வீதிகளில் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் அபாயகரமாக வாகனங்களைச் செலுத்தியவர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பேணாத சாரதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் 10 மோட்டார் சைக்கிள்களும் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட சம்மாந்துறை காவல்துறையினர், போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் மற்றும் தலைக்கவசமின்றி வாகனம் செலுத்துவோருக்கு எதிராகத் தட்டச்சு முறையில் நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |