உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மேலும் இருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவம் குறித்து மேலும் இருவருக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு இன்று (07.10.2026) இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்டவர்களுடன், இணைந்து புத்தளம் வனாத்தவில்லு, லக்டோஸ் தோட்டப் பகுதியில் உள்ள காணியொன்றில் வெடிபொருட்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைத்தமை தொடர்பான வழக்கில் குறித்த இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணை
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டுகளைப் பிரதிவாதிகள் இருவரும் ஒப்புக்கொண்டதையடுத்து, லால் பண்டார, நயோமி விக்ரமசேகர மற்றும் ரஷ்மி சிங்கப்புலி ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்தத் தண்டனையை அறிவித்தது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினரால் புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை களஞ்சியப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 05 ஆம் திகதி முதல் முவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |