நாளொன்றுக்கு வாகன விபத்தில் சிக்கி 120 பேர் வைத்தியசாலையில் அனுமதி - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்
வாகனத்தில் பயணிக்கும் போது சிந்தனைகளை தவற விடுதல், மன அழுத்தங்கள் போன்றவற்றுடன் பயணித்தல் போன்றவற்றால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளொன்றுக்கு விபத்துக்களில் சிக்கி 120 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்து தட்டுப்பாடு

இதுகுறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு சராசரியாக 120 பேர் விபத்து பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
நேரடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களும் , வேறு வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களில் சுமார் 10 பேர் என்பு முறிவுகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிறிய முறிவுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க முடிகிறது. பெரும்பான்மையான என்பு முறிவுக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
அவற்றின் போது சிலருக்கு தகடு வைக்க வேண்டிய தேவையும் உள்ளது. இவ்வாறான பெரியளவிலான சத்திர சிகிச்சைக்காக சுமார் 4 மாத கால பகுதிக்கு மேல் காத்திருக்க வேண்டும்.
இவற்றுக்கு சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவாகின்றது. அதேவேளை சில மருந்துகளுக்கு தட்டுப்பாடும் நிலவுகின்றது.
எனவே விபத்துக்களில் சிக்காது அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக இளையோர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் அதிகம் சிக்குகின்றனர். அவதானமாக மோட்டார் சைக்கிள் செலுத்த வேண்டும்” என்றார்.