அரசு மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 18 நோயாளிகள் பலி - விசாரணைக்கு உத்தரவு
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலமொன்றில் உள்ள அரச மருத்துமனையில் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையிலேயே நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் ஐந்து நோயாளிகள் உயிரிழப்பு
இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். குறித்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சீரான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோதிலும் அதனை மருத்துவமனை நிர்வாகம் முற்றாக மறுத்திருந்தது.
இந்த நிலையிலேயே அந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் இறந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.