கோடி ரூபா பெறுமதியான இஞ்சியுடன் இருவர் கைது
இந்தியாவில் (India) இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு (Sri Lanka) சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கோடி ரூபா பெறுமதியான இஞ்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இஞ்சி மூட்டைகள் நுரைச்சோலை - இலந்தையடி கடற்பிரதேசத்தில் வைத்து நேற்று (05) கைப்பற்றப்பட்டுள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி - உச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
ஒரு கோடி ரூபா பெறுமதி
இந்நிலையில், மூன்று கடற்றொழில் இயந்திர படகுகள், 3 என்ஜின்கள் மற்றும் இருப்பிடத்தின் திசையைக் கண்டறியும் ஜி.பி.எஸ் கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 29 மூடைகளில் அடைக்கப்பட்ட 1456 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை 1 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு
இலங்கை சந்தையில் இஞ்சியின் விலை உச்சத்தை தொட்டிருப்பதால், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |