பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 2 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
குறித்த கொடுப்பனவு தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட கைத்தொழில்கள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை, சிறு தொழில் அபிவிருத்தி பிரிவு, தேசிய உற்பத்தித்திறன் செயலகம், தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் தேசிய வடிவமைப்பு நிலையம் ஆகிய நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட கைத்தொழிலாளர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது.
தொலைபேசி இலக்கம் அறிமுகம்
இதற்காக கைத்தொழில் உரிமையாளர்கள் www.industry.gov.lk எனும் இணையத்தளம் ஊடாகவோ அல்லது மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறு தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஊடாகவோ இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

மேலும் 'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக அக்கைத்தொழில்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு பொறிமுறையை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பில் அமைச்சுக்கு தகவல் வழங்குவதற்கு "0712666660" எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான உரிய தகவல்களை கூடிய விரைவில் வழங்குமாறும் அமைச்சு பாதிக்கப்பட்ட கைத்தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தகவல்களை வழங்குதல் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, தகவல்களை உள்ளிடுதலை www.industry.gov.lk ஊடாக அல்லது https://aid.floodsupport.org/business-impact ஊடாக மேற்கொள்ள முடியும்.

தேவையான ஒத்துழைப்பை நீங்கள் சார்ந்த பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்தகவல்களை சேகரித்ததன் பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்துக் கைத்தொழில்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உதவியை வழங்குவதற்கும், ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் அமைச்சு எதிர்பார்க்கின்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |