படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்
மட்டக்களப்பில் (Batticaloa) படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெறவுள்ளது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் எற்பாட்டில் நாளை (31.05.2024) மாலை 4.30 மணியளவில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள் என பலரும் பற்கேற்கவுள்ளனர்.
ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நிகழ்வு
இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ளதோடு, பின்னர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டிய போராட்டமும் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக் குழுவொன்றினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதேவேளை 20 வருடங்கள் கடந்தும் அவருக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |