பாகிஸ்தானில் கொட்டுகிறது பனி - 21பேர் மூச்சுத்திணறி பரிதாப மரணம் (படங்கள்)
பாகிஸ்தானில் இடம்பெற்ற கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் மூச்சுத் திணறி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் – பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கடும் பனிப்பொழிவால் வாகனங்களில் இருந்தவர்களே, உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் முர்ரி மலைப் பிரதேசமானது, குளிர் காலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தரும் பிரதேசமாக காணப்படுகின்றது. கடும் பனிப் பொழிவுடனான வானிலையினால், வாகனங்களில் இருந்தவர்களுக்கு, திடீர் முச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட முச்சுத் திணறல் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பனிப் பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இஸ்லாமாபாத் – முர்ரி நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்கு இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




