யோஷிதவின் பிரித்தானிய கல்விக்காக 24,536 யூரோக்களை செலுத்திய ராஜபக்ச அரசாங்கம்
பிரித்தானியாவில் உள்ள அரச கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் அரச கடற்படை இளம் அதிகாரிகள் பாடநெறியில் பயில்வதற்காக, முன்னாள் கடற்படை லெப்டினன்ட் யோஷித ராஜபக்வுக்கு அரசாங்க நிதியிலிருந்து 24,536 யூரோ செலுத்தப்பட்டமையானது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் டிராவிஸ் சின்னையா சார்பாக மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் சாட்சியமளித்த கடற்படைப் பிரதிநிதி ஒருவர், 2014 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதியன்று , அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோட, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு எழுதிய கடிதம் மூலம் உரிய தொகையைச் செலுத்த அனுமதி கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏறத்தாழ ரூ. 735 மில்லியன்
2012 ஆகஸ்ட் 1 முதல் 2013 ஆகஸ்ட் 29 வரை ராஜகிரிய மற்றும் பம்பலப்பிட்டிய பகுதிகளில் ஏறத்தாழ ரூ. 735 மில்லியன் எவ்வாறு ஈட்டப்பட்டது என்பதை வெளியிடத் தவறியதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சாட்சியமளித்த கடற்படை அதிகாரியான நுவன் துஷார அரங்கல, ''யோஷித ராஜபக்சவின் 9 ஆண்டு கால சேவையின் போது அவருக்கு சம்பளம் மற்றும் படிகளாக ரூ. 5,159,626.37 வழங்கப்பட்டது.
அவரது மாதாந்திர மொத்த சம்பளம் ரூ. 16,390 ஆக இருந்தது, இது தவிர அவர் உணவு, சீருடைகள், வீட்டு வாடகை மற்றும் சிறப்புப் பணிக்கான படிகளையும் பெற்றார்" என கூறியுள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கியின் தலைமை அலுவலக கிளை மேலாளர் கனிஷ்க காமினி, பிரதிவாதியின் ரூ. 72,470.03 மதிப்பிலான, 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிலையான வைப்புத்தொகை, தற்போது வட்டியுடன் ரூ. 489,411.76 ஆக வளர்ந்துள்ளது என்றும், அதிலிருந்தோ அல்லது மற்ற சேமிப்புக் கணக்குகளிலிருந்தோ எந்தப் பணமும் எடுக்கப்படவில்லை என்றும் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |