'குமாரபுரம் மனிதப் படுகொலை' - 27ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (படங்கள்)
மூதூர் - குமாரபுரம் படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று சனிக்கிழமை குமாரபுரத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
இதனை குமாரபுரம் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது குமாரபுரம் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, 26 தீபங்களேற்றி நினைவஞ்சலியும் இடம்பெற்றது.
குமாரபுரம் மனிதப் படுகொலை
மூதூர் - குமாரபுரம் பகுதியில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்று 27 ஆண்டுகள் ஆகின்றன. இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 24 பேரளவிள் காயமடைந்திருந்தார்கள்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக் கொடூர சம்பவம் 1996.02.11ஆம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.
வழக்கு விசாரணை


இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தநிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு யூலை மாதம் 27ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்ததத்து.
