தொடருந்து கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசுவின் சடலம்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்து கழிப்பறையில் இருந்து பெண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிசுவின் வயது சுமார் மூன்று நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிசுவின் சடலம் நேற்று மாளிகாவத்தை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்து எண் 8346-இன் மூன்றாம் வகுப்பு பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான துர்நாற்றம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று காலை புத்தளத்திலிருந்து கல்கிசைக்கு வந்த தொடருந்து எண் 8346, பயணத்தை முடித்து மாளிகாவத்தை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
தொடருந்தை சுத்தம் செய்யச் சென்ற தொழிலாளர்கள் குழு, மூன்றாம் வகுப்பு பெட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதைக் கவனித்து, சோதனை செய்தபோது, கழிப்பறையில் ஒரு பையில் சுற்றப்பட்டிருந்த பெண் சிசுவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொழிலாளர்கள் உடனடியாக தெமட்டகொட காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதில், சிசுவின் வயது மூன்று நாட்கள் எனவும், தொப்புள் கொடியின் ஒரு பகுதி இன்னும் இருப்பதையும் கண்டறிந்தனர்.
இதனால், இந்தப் பிரசவம் வைத்தியசாலையில் நடைபெறவில்லை என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காவல்துறையினரால் அடையாளம்
சிசு வைக்கப்பட்டிருந்த பை, DUTY FREE பை என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, அது டுபாயைச் சேர்ந்தது என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அளுத்கம நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, சிசுவின் உடலையும் தொடருந்து பெட்டியையும் ஆய்வு செய்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
