யாழ். பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப்பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்களையே இவ்வாறு பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்று (13) ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பத்மநாதன் கதிர்காமநாதன் மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோரே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள்
யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (14) துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதன்படி, இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜசோதா பிரபாகர் இரசாயனவியலில் பேராசிரியராகவும், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பத்மநாதன் கதிர்காமநாதன் பொறியியற் கணிதவியலில் பேராசிரியராகவும், ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருநாவுக்கரசு கருணாகரன் ஆங்கில மொழி கற்பித்தலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |