வலுக்கும் மணிப்பூர் கலவரம்: பழங்குடியினத்தை சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் இடம்பெற்ற கலவரத்தில் கங்போப்கி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (12) இடம்பெற்ற கலவரத்தின் போது அதில் நுழைந்த தடைசெய்யப்பட்ட ஆயுத கும்பலைச் சேர்ந்தவர்களே பழங்குடியினரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக மணிப்பூரில் இரண்டு பழங்குடியினத்தவர்களுக்கு இடையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கலவரம் இன்னும் நீடித்த வண்ணம் உள்ளது.
இந்த கலவரத்தின் காரணமாக இதுவரையில் 180 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், வாழ்வாதாரம் என்பவற்றை இழந்து, சொந்த நிலத்திலேயே அகதிகளைப் போன்று நிவாரண முகாம்களில் தஞ்சம் புகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பதற்ற நிலை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட மணிப்பூரின் தெங்னெவ்பால் மாவட்டத்தின் பல்லேல் நகரில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், பெண்கள் உட்பட 50-இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவமானது அங்கு பதற்ற நிலையினை உருவாக்கியுள்ளது.
வாகனங்களில் வந்திறங்கிய ஆயுத கும்பலை சேர்ந்தவர்கள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
மணிப்பூரின் கங்போக்பியை தளமாக கொண்ட செயல்படும் பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழு என்ற சிவில் சமூக அமைப்பானது இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.