மறைந்த ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் 6 ஆவது ஆண்டு நினைவேந்தல் கடைப்பிடிப்பு
6 ஆவது ஆண்டு நினைவேந்தல்
மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், அவர் ஞாபகார்த்த ஊடகக்கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இளவயதில் அஸ்வினை தமிழ்த் தாய் இழந்தமை இலங்கைத் தமிழ் ஊடகப் பரப்பில் ஈடுசெய்ய முடியாதொரு பெரும் இழப்பு என இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்டிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்ரவன் கூறியுள்ளார்.
இலங்கை ஊடக அரங்கில் கருத்தாளமிக்க மற்றும் தீர்க்கதரிசனம் கூறும் கேலிச் சித்திரங்களால் அனைவரையும் கவர்ந்திழுத்து தனக்கெனவொரு முத்திரையை பதித்த முன்னணி கேலிச் சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சன் கடந்த 2016 ஆம் ஆண்டு உக்ரைனில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிர்நீத்திருந்தார்.
இந்த நிலையில் யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், அஸ்வின் குறித்த ஞாபகார்த்த உரைகள் இடம்பெற்றதுடன், அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடகக் கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஊடகப்பயணம்
ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அஸ்வின், வலம்புரி, சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் தனக்கான முத்திரைகளை பதித்துள்ளார். அதேவேளை வீரகேசரியின் யாழ்.ஓசை பதிப்பின் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
இதில் அவர் எழுதிய கேட்டியளே சங்கதி என்ற பத்தி எழுத்து பல இடங்களிலும் எதிரொலித்ததுடன், அந்த எழுத்துகளுக்காக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த ஊடகவியலாளர் விருதை அவர் வெற்றிகொண்டிருந்தார்.
இறுதியாக தினக்குரல் பத்திரிகையில் அஸ்வின் சுதர்சன் வரைந்த கருத்தாழமிக்க கேலிச் சித்திரங்கள் வாசகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் பேசவைத்ததுடன், பல கேலிச் சித்திரங்கள் இன்றைய காலத்திற்கும் பொருத்தமான தீர்க்கதரிசன ஓவியங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
