இலங்கையரை கொன்று வீதியில் இழுத்துச் சென்ற கொலைகாரர்கள் - வெளிவரும் பதற வைக்கும் தகவல்கள்
பாகிஸ்தானில் கொடூரமாக இலங்கையர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது உடலை கொலைகாரர்கள் வீதியில் இழுத்துச் சென்றதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் சியால்கோட், வசிராபாத் சாலையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய இலங்கையரான இரண்டு பிள்ளைகளின் தந்தை பிரியந்த குமார என்பவர் நேற்றையதினம் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நடைபெற்று ஒரு நாளுக்குப் பிறகு, பாகிஸ்தான் காவல்துறையினர் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கைது செய்ததுடன் குறைந்தது 800 பேர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முக்கிய சந்தேக நபரான பர்ஹான் இத்ரீஸ்(Farhan Idrees) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரியந்த குமார கொலை செய்யப்பட்ட போது தொழிற்சாலைக்குள் தடி மற்றும் பொல்லுகளுடன் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையின் படி, இலங்கை பிரஜை, மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையை பஞ்சாப் காவல்துறை பிரதமர் இம்ரான் கானிடம் சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின்படி, தொழிற்சாலை மேலாளர்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட குறைந்தது 112 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூண்டிவிட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.