எனது மரணம் உலகத்திற்கே கேட்கும் : இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காசாவில் (Gaza) கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தொடர்தாக்குதலில் 90 பேர் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் (Israel) மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
போர்நிறுத்த ஒப்பந்தம்
போர்நிறுத்த ஒப்பந்தம் முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கான பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் ஹமாஸ் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 90 பேர் உயிரிழந்ததாக காசாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 15 பேர் ஒரே இரவில் கொல்லப்பட்டதாக லைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்
இதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு காசாவில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் ஃபாத்திமா மற்றும் அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதில் அவரின் கர்ப்பமான சகோதரியும் அடங்குவார். "நான் ஒரு செய்தியாக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்படியும், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படியும் இருக்க விரும்புகிறேன்" என ஃபாத்திமா ஒருமுறை இணையத்தில் பதிவிட்டதை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
