விவசாயிகளுக்கு நெல்லுக்கான நிர்ணய விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு விசேட கடன் திடடம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, இந்தமுறை பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக “மடபன” கடன் திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாக அதிபரின் பொதுமக்கள் அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்கள், தொகை நெல் சேகரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் வகையில் இந்த திட்டத்ததை செயற்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் இந்த கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல் கொள்வனவிற்காக கடன்
சிறு மற்றும் மத்திய தர அரிசி உற்பத்தி தொழில்துறையினர் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (14) அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“இந்த கடன் திட்டத்தின் கீழ், 09 பில்லியன் ரூபா கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாவும், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்களுக்கும் தொகை நெல் சேகரிப்பாளர்களுக்கும் அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரை கடனாக வழங்கப்படும்.
கடனைத் திருப்பிச் செலுத்த 180 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். 15% வருட வட்டி வீதத்தில் 4% வீதம் திறைசேரியினால் அந்தந்த வங்கிகளுக்கு வழங்கப்படும். அதன்படி, கடன் பெறுநர்கள் 11% மட்டுமே வருட வட்டி செலுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு நல்ல விலையை பெற்றுக்கொடுப்பதோடு, மக்களுக்கும் நியாயமான விலையில் அரிசியை பெற்றுக்கொடுப்பதே இக்கடன் திட்டத்தின் நோக்கமாகும்.
ரணில் விக்ரமசிங்கவின் பிரேரணை
பெரும்போகத்தின் அறுவடை ஆரம்பமாகும் வேளையில் விவசாயிகளுக்கு (நாடு கிலோ 105 ரூபா, சம்பா 120 ரூபா, கீரி சம்பா 130 ரூபா) நிர்ணய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக இந்த கடன் வழங்கப்படும்.
நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க 2024.01.24 அன்று முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
நாளாந்தம் அதிகபட்ச கதிரடிக்கும் கொள்ளவு 25 மெற்றிக் தொன் என்ற அடிப்படையில் சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் மேற்கொண்டிருக்கும் சரியான ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் நெல் தொகை சேகரிப்பாளர்கள் இந்த “மடபன” கடன் திட்டத்திற்கு தகுதி பெறுவர்.
சந்திப்பில் பலர் கலந்துகொண்டனர்
அதன்படி விரைவில் எமது சங்கத்தினர் மற்றும் சிறு, மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தி உரிய வங்கிகள் ஊடாக கடன் பெற்றுகொள்ள விண்ணப்பிக்குமாறு அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
இலகுவான வேலைத்திட்டத்தின் கீழ் இந்த கடன் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த அனைரும் உதவவேண்டும்.“ எனத் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் பல நிதி நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருந்ததுடன், இதன் காரணமாக தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
விவசாய அமைச்சும் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் அகில இலங்கை அரிசி ஆலை தொழில்துறையினர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |