ஏ9 வீதியின் இரு புறங்களிலும் கழிவகற்றும் பணி ஆரம்பம்
ஏ9 வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் இன்று (31) குறித்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
எதிர்கால சந்ததிக்கான சிறந்த சுற்றுச்சூழலை அமைக்கும் நோக்குடன் இந்த கழிவு அகற்றல் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கழிவகற்றும் நடவடிக்கை
பனிக்கன்குளம், கிழவன்குளம், மாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் மக்கள் உலக சிறுவர் நலன் காப்பக ஊழியர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில பணியாளர்களைக் கொண்டு உழவு இயந்திரங்கள் மூலம் வீதியின் இருமருங்கிலும் இருக்கின்ற பிளாஸ்டிக் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு பிரதேச சபையினரிடம் வழங்கப்படுகின்ற பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
கோரிக்கை
மாங்குளம் முதல் முறுகண்டி வரையிலான பகுதிகளில் 15 குப்பை தொட்டிகள் அமைக்கப்படுவது மாசடைவை தடுப்பதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும் என்பதால் இந்த செயல் திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு வழங்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |