இந்தோனேசியாவின் அமைச்சரைச் சந்தித்த அதிபர் ரணில்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள்
இந்தோனேசியாவிற்கு (Indonesia) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் (Luhut Binsar Pandjaitan) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று (19) பாலி தீவிலுள்ள “United In Diversity” வளாகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில், “Global Blended Finance Alliance“ அமைப்பின் நாடுகள், வெப்ப வலயத்துக்கான இலங்கையின் முன்னெடுப்பு, நீலப் பொருளாதாரம், கடற்பாசி தொழில்துறை போன்ற விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டது.
பணிக்குழுவை நிறுவுதல்
அதேபோல், தென்துருவ நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, சதுப்புநில பயிர்ச்செய்கை தொடர்பான ஒத்துழைப்பு, செயற்றிட்டத்துக்கான ஆராய்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் ஒருங்கிணைந்த இருதரப்பு பணிக்குழுவை நிறுவுதல், இந்து சமுத்திர எல்லை நாடுகளில் (IORA) தற்போதைய தலைவராக இலங்கையின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சந்திப்பில் கலந்துகொண்டோர்
இந்த சந்திப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், காலநிலை மாற்றங்கள் தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, காலநிலை மாற்றங்கள் தொடர்பான செயலகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் சிரேஷ்ட மேலதிகச் செயலாளருமான வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தோனேசியா சார்பில் அந்நாட்டின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் அயோதாய் ஜி.எல். கலாகே, வனம் மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவ பிரதி அமைச்சர் நானி ஹெந்தியார்த்தி, உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ரஹ்மத் கைமுதீன், கடல் வளத்துறை பிரதி அமைச்சர் ப்ரீமன் ஹிதாயத், காலநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு ஆலோசகர் செரி நூர் சலீம் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |