தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் (21) இடம்பெறவுள்ளது.
திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் குறித்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர் செயற்படவுள்ளனர்.
336 பேருக்கு அதிகமானோர் வாக்களிப்பு
குறித்த 8 பேரும் தலைமைக்கு போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளர்களையும் ஆதரித்து முன்மொழிவுகளைச் செய்யாதவர்களாகவும், அதேநேரம் பொதுச்சபையில் வாக்களிப்பு அந்தஸ்தைக் கொண்டிருக்கதவர்களாகவும் இருக்க வேண்டியது கட்டாயமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்களுமாக 336பேருக்கு அதிகமானவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இதற்கு முன்னதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்பு மனு கோரப்பட்டபோது கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனும் விண்ணப்பங்களை செய்திருந்தனர்.
மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்திருந்தார்
எனினும் கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் போட்டியின்றி தலைமைத்தெரிவு நடைபெறவேண்டுமென்று கருத்து வலியுறுத்தப்பட்டதை அடுத்து மூன்று வேட்பாளர்கள் இடையேயும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் புதிய தலைமைக்கு வாக்கெடுப்பை நடத்துவதே பொருத்தமானது என்ற தீர்மானம் இறுதியானது.
இந்தநிலையில் அண்மைய நாட்களில் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமைக்கு போட்டியிடும் சக வேட்பாளரான சிறீதரனை ஆதரிக்க தீர்மானத்தினை எடுத்துள்ளதன் காரணமாக சுமந்திரன் மற்றும் சிறீதரன் இடையே பிரதான போட்டி நிலவுகின்றது.
இதேநேரம் குறித்த வாக்கெடுப்பை நடத்துவதற்கு முன்னதாக கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தினை நேற்றையதினம் கூட்டுவதற்கு தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்திருந்தபோதும் பதில் பொதுச்செயலாளருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |