ஒரே ஆண்டில் சாதாரண தர - உயர் தர இரண்டு பரீட்சைகளிலும் அசத்திய மாணவி!
ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றி சிறப்பான சித்தி பெற்று கொழும்பு விசாகா வித்தியாலய மாணவி ரனுலி விஜேசிர்வர்தன சாதனை படைத்துள்ளார்.
ரனுலி மே 2024 இல் 2023 (2024) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி, ஆங்கில இலக்கியத்தில் பி சித்தியுடன் 8 ஏ மற்றும் 1 பி சித்தியைப் பெற்றுள்ளார்.
3 ஏ சித்திகள்
அதனை தொடர்ந்து, நவம்பர் 2024 இல், அவர் கணிதப்பிரிவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி 3 ஏ சித்திகளை பெற்று தேசிய ரீதியில் 963 இடத்தையும் பெற்றுள்ளார்.
தனது 10 ஆம் வகுப்பு படிப்பை முடிக்கும் போதே ரனுலி, உயர்தரப் பாடத்திட்டத்திற்கும் தயாராகியுள்ளார்.
குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட மாணவர்கள் பாடசாலை மூலம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்படாததால், அவர் தனியார் பரீட்சார்த்தியாக பரீட்சைக்கு தோற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.
தந்தையின் வேண்டுகோள்
இந்த நிலையில், 20 வருட அனுபவமுள்ள ஆசிரியரான அவரது தந்தை, இலங்கையின் கல்வி முறை திறமையான மாணவர்கள் விரைவாக முன்னேற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பட்டதாரிகள் பெரும்பாலும் 26 அல்லது 27 வயதில் பணியிடத்தில் சேர்கிறார்கள், மற்ற நாடுகளில் இது 21 அல்லது 22 வயதாகும், அதன்படி, விரைவான பட்டப்படிப்பு தனிநபர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
