காவல்துறை உத்தியோகத்தரின் கையை கடித்த பெண் கைது
போதைப்பொருள் வர்த்தகத்தை சுற்றிவளைக்கச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் கையை கடித்த பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று (28) கைது செய்யப்பட்டதாக பின்வத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மஹாவில மடுப்பிட்டிய வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சோதனை நடவடிக்கையின்போது

மஹாவில, மடுப்பிட்டிய வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஹெரோயின் சோதனையின் போது, காவல்துறை உத்தியோகத்தரின் கையை குறித்த பெண் கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் கணவர் முன்னதாக மூன்று ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், மற்றொரு நபர் அவரைப் பார்ப்பதற்காக சோற்று பார்சலைக் கொண்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சோதனை

காவல்துறையினர் குறித்த சோற்று பார்சலை சோதனையிட்டபோது இரண்டு மீன் துண்டுகளுக்குப் பின்னால் ஐந்து சிறிய ஐஸ் போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
சோற்றுப் பார்சலைக் கொண்டு வந்த நபருக்கே போதைப்பொருள் வழங்கப்பட்டதை அறிந்த காவல்துறை குழு சந்தேக நபரின் மனைவியின் இல்லத்திற்கு சோதனையை மேற்கொள்ளச் சென்றுள்ளனர்.
திடீரென கையை கடித்த பெண்

வீட்டில் பெண் கான்ஸ்டபிள்கள் சோதனையிட்டபோது,வீட்டிலிருந்த பெண் காவல்துறையினருடன் சண்டையிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்போது சந்தேகநபரான பெண்ணுக்கு அருகில் இருந்த காவல்துறை உத்தியோகத்தரின் கையை கடித்துள்ளதாகவும், பின்னர் சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த ஐஸ் போதைப்பொருளை பெண் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்