தற்கொலை முயற்சியால் முடங்கியது ஏ9 வீதி!!
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இன்று மாலை தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
தனது மனைவியை அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டுத்தருமாறு கோரியே குறித்த போராட்டத்தினை அவர் முன்னெடுத்திருந்தார். தனது மனைவி வரும் வரை கோபுரத்திலிருந்து இறங்கமாட்டேன் என தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்திருந்த காவல்துறையினர் , நீண்ட நேரமாகியும் இளைஞரை கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதமையினால் சினமடைந்த இளைஞரின் உறவினர்கள் ஏ9 பிரதான வீதியினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தாமதமாகியதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், குறித்த இளைஞரின் மனைவியை மீட்டுத்தருவதாக உறுதிமொழி வழங்கியிருந்தனர். இதனையடுத்து வீதிமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் இளைஞரின் உறவினர்கள் ஒலிபெருக்கி மூலம் கோபுரத்தில் இருந்த இளைஞரை இறங்குமாறு தெரிவித்த நிலையில், அவர்களது வாக்குறுதியை நம்பி 4 மணித்தியாலங்களிற்கு பின்னர் குறித்த இளைஞர் கீழே இறங்கினார்.
கோபுரத்தில் நின்ற அவர் தனது கையினை கூரிய ஆயுதத்தால் அறுத்தமையால், மயக்கமடைந்த நிலையில் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



