இலங்கையில் தொடரும் துயரம் - 48மணிநேரங்களில் 30 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த 48 மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 30 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
புது வருட தினமான ஏப்ரல் 14, மு.ப. 9.00 மணி முதல் மறுநாள் (15) அதிகாலை 6.00 மணி வரை நாடு முழுவதும் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், போதையில் வாகனம் செலுத்திய 783 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 534 மோட்டார் சைக்கிள் சாரதிகள் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 2,844 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 16 பேர் மரணமடைந்துள்ளதாகவும், நேற்றையதினம் (15) மாத்திரம் இடம்பெற்ற விபத்துகளில் 08 பேர் மரணமடைந்துள்ளதாகவும், ஏனைய 08 பேரும் நேற்றுமுன்தினம் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளின் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.