தொழிற்பயிற்சிக் கல்வி நாட்டின் தற்போதைய தேவை : வழங்கப்படவுள்ள அங்கீகாரம்
தொழிற்பயிற்சிக் கல்வி நாட்டின் தற்போதைய தேவை எனவும், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் அந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தினார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், “தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் கல்வி நிறுவனங்கள் உள்ளன, தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இருக்கும் அங்கீகாரம் இல்லை. தற்காலத்தில் தொழில் பயிற்சிக் கல்வி நாட்டின் தேவையாக இருப்பதனால், அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
கல்வி முறையில் மாற்றம்
தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இருக்கும் அங்கீகாரம் இல்லாததால் நாட்டின் இளைஞர் சமூகம் தொழிற்கல்வியில் கவனம் செலுத்துவதை தவிர்த்து வருகின்றது.

ஏனைய நாடுகளில், அவர்களுக்கு தமது தொழில்பயிற்சி தொடர்பான பட்டத்தை வழங்குகிறார்கள். இங்கு அவ்வாறு தொழில்பயிற்சிக்காக குறித்த நிறுவனங்களால் பட்டம் வழங்கப்படுவதில்லை, அதனால்தான் இந்த நாட்டின் கல்வி முறையில் முழுமையான மாற்றம் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.
நமது நாட்டில் உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறுவதனாலேயே சில மாணவர்கள் வெளிநாடு செல்கின்றனர். மேலும், மாணவர்களின் காலத்தை வீணடிப்பது கடுமையான குற்றமாகும். பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை, பல மாதங்களாக அவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கின்றனர்.
மாணவர்களின் காலத்தை வீணடிக்கும் கல்வி முறை மாற்றப்பட வேண்டும். இவ்வாறான நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குப் பதிலாக சுயாதீனமாக செயற்படக்கூடிய உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை நாம் முன்மொழிந்துள்ளோம்” என்றார்.
பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவினால் பாராட்டுச் சான்றிதழ் (படங்கள்)