முறையற்ற விதத்தில் வற் வரி அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை : பொதுமக்களுக்கு ஆலோசனை
நாட்டில் முறையான வழிமுறைகள் இல்லாமல் வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை அறவிடும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது
வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக வற் வரி அறவிடும் உரிமை வியாபாரிகளுக்கு கிடையாது என அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர குறிப்பிட்டதாவது,
வற் வரி அதிகரிப்பு
“ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில வியாபாரிகள் பொருட்களின் விலைப் பட்டியலுடன் வற் வரியை நேரடியாக அறவிடுவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
முறையான வழிமுறைகள் இல்லாமல் வற் வரி அறவிடும் தரப்பினருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்
வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக வற் வரி அறவிடும் உரிமை வியாபாரிகளுக்கு கிடையாது.
ஆகவே இவ்வாறான முறையற்ற செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் இறைவரித் திணைக்களத்தின் cgir@ird.gov.lk என்ற உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரி ஊடாக தெரிவிக்க முடியும்.
இதேவேளை ஆணையாளர் நாயகம் தேசிய இறைவரித் திணைக்களம், சிற்றம்பலம், ஏ.கார்டினர் மாவத்தை கொழும்பு -02 என்ற முகவரி ஊடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |