ஐ.எம்.எப் பேச்சில் இழுபறி! இலங்கைக்கு கிடைக்கவுள்ள மற்றுமொரு அவசர கடனுதவி
இலங்கைக்கு அவசர கடனுதவி
இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடன் உதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.
உணவு பாதுகாப்பை மேம்படுத்தவும், ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் குறித்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் இலங்கைக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உணவு பற்றாக்குறை மக்களை கடுமையாக பாதித்துள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த உதவி ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நேரடி நிதி உதவியாக வழங்கப்படும் என தெற்காசியாவிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூத்த கல்வி நிபுணர் அசாகோ மருயமா தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் மூன்று மாதங்களுக்கு இலங்கையில் நடைமுறைப்படுத்த படுவதன் மூலம் சமூக உதவி திட்டங்களின் பயனாளிகளுக்கு பெரும் உதவியாக அமையுமென ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஐ.எம்.எப் பேச்சில் இழுபறி
இதேவேளை, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு அவசரமாக நிதியளிப்பதற்கு ஏதுவான உடன்பாடு ஒன்று நாளை பகிரங்கப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இவ்வாறான ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதான செய்திகள் குறித்து இன்று மாலை வரை இரண்டு தரப்புகளும் உறுதிப்படுத்த மறுப்புத்தெரிவித்துள்ளன.
எனினும் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களின் பெறுபேறுகள் குறித்த முடிவு நாளை அறிவிக்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.