ஆப்கானிடம் முதன்முறையாக வீழ்ந்தது பாகிஸ்தான்
ஒருநாள் போட்டியில் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
2023 உலககிண்ணப்போட்டியின் இரு அணிகளுக்குமிடையேயான போட்டி இன்று சென்னையில் இடம்பெற்ற நிலையிலேயே பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி
போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் பாபர் அசாம் அதிகபட்சமாக 74 ஓட்டங்களை பெற்றதுடன் அப்துல்லா சபீக் 58 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் மிரட்டிய ஆப்கான் அணி
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நூர் அகமட் 3 விக்கெட்டுக்களையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுக்களையும் மொகமட் நபி, அஸ்மதுல்லா தலா 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 283 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரகமதுல்லா குர்பாஷ் 65 ஓட்டங்களையும், இப்ராகிம் சர்தான் 87 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
புள்ளி பட்டியலில் முன்னேற்றம்
ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய ரகமட் ஷா 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹஸ்மதுல்லா சகிடி 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளுடன் 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.