தென்கயிலை ஆதீனக் குருமுதல்வர் அகத்தியர் அடிகளாருக்கு அறுபதாவது அகவை பூர்த்தி
ஈழத்தின் தென்கயிலை ஆதீனக் குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அறுபதாவது அகவை பூர்த்தியை முன்னிட்டு, அகில இலங்கை சைவ மகா சபை உள்ளிட்ட வடக்கு கிழக்கின் சைவ அமைப்புகள் இணைந்து நேற்றைய தினம் (06) அவருக்கான சிவசங்கம நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தன.
கன்னியா சிவன் மலையில் அமைந்துள்ள தென்கைலை ஆதீனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 30ஆண்டுகளுக்கும் அதிகமான காலப்பகுதியில் துறவை ஏற்று சைவத்தமிழ் உலகிற்கு அரும் பணியாற்றி வரும் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஈழத்தின் சிவபூமி என்று போற்றப்படுகின்ற திருஞான சம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற திருகோணச்சர பதியில் தென்கயிலை ஆதீனமாக இருந்து வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தனது ஆன்மீகப் பணிகளை ஆற்றி வருகின்றார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அடிகளாரின் அறுபதாவது அகவை நாளினை நினைவுகூரும் முகமாக அகில இலங்கை சைவமகாசபையின் பொதுச்செயலாளர் மருத்துவர் பரா . நந்தகுமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா வேதாகமாமணி பிரம்மசிறி சோ. ரவிச்சந்திரக்குருக்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ . யோகேஸ்வரன் மற்றும் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தச் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆன்மீக ஆர்வலர்களும் கலந்துகொண்டதுடன் இறை வழிபாடுகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடிகளாரினால், தென்கயிலை ஆதீனத்தில் 1008 சிவலிங்கங்களை ஸ்தாபிக்கும் முயற்சியில், தற்போதுவரை 380 இற்கும் அதிகமான லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

