தமிழக அரசியலில் பரபரப்பு: உடைந்தது அதிமுக - பாஜக கூட்டணி
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டுவருவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை தமிழ் நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஏனைய கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட அ.தி.மு.க முடிவு செய்துள்ளதை அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக - பாஜக கூட்டணி
தமிழ் நாட்டு சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி நான்கு தொகுதிகளை கைப்பற்றிய போதிலும் அதன் பின்னர் அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நிலவிவந்தது.
குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, அ.தி.மு.கவின் மறைந்த தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்ததை அடுத்து மோதலானது உச்சத்திற்கு சென்றிருந்தது.
அ.தி.மு.க தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்ததுடன், வார்த்தைப் போரின் உச்சக் கட்டமாக பாரதீய ஜனதா கட்சியுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து டெல்லிக்கு சென்றிருந்த அ.தி.மு.கவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அண்ணாமலையை நீக்குமாறும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.
எனினும் அ.தி.மு.க. தலைவர்களின் குற்றச்சாட்டை மாத்திரமல்லாமல், அண்ணாமலையை மாற்றுமாறு விடுத்த கோரிக்கையையும் ஜே.பி.நட்டா ஏற்கவில்லை என்பதுடன், அண்ணாமலை விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையை மாற்றுமாறு கோரிக்கை
இந்த நிலையில் அ.தி.மு.க. கழகப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, இன்று பிற்பகல் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டியிருந்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம், பாரதீய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.
அத்துடன் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்வதாக அ.தி.மு.கவின் தலைமை கழகம் அறிவித்துள்ளமை தமிழ் நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.கவின் இரண்டு கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து பாரதீய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கழகத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க தலைமை கழகம் குற்றஞ்சாட்டு
தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கடந்த ஓராண்டாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அ.தி.மு.க மீதும், கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் அம்மா ஆகியோரை அவதூறாக பேசியும் தமது கொள்கைகளையும் விமர்சித்துவருவதாகவும் அ.தி.மு.க தலைமை கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் மதுரையில் நடத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும் 2 கோடி தொண்டர்களை வழிநடத்திவரும் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பற்றி அண்ணாமலை அவதூறாக விமர்சித்தமையும் கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிககள் மட்டத்தில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இன்று இடம்பெற்ற தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முடிவுறுத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அ.தி.மு.கவின் தலைமை கழகம் மேலும் கூறியுள்ளது.