நாட்டுப்பற்றாளர் நடேசனின் 19 ஆவது ஆண்டு நினைவு இன்று - கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது ஐபிசி தமிழ்
உண்மையையும் பக்கம் சாரா தன்மையையும் தம்மிரு கண்களென, உறுதியெனப்பூண்ட பாரம்பரியமான ஊடகக் கோட்பாட்டுவாயிலாக ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகமொன்றை வேண்டி தனது எழுத்துக்களோடு பயணித்த ஈழத்தின் ஊடகப்போராளி ஐ. நடேசன் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.
தமிழ்த்தேசிய அரசியியலையும் அதன் போக்கின் மீதான கரிசனைகளையும் நெஞ்சுரத்தோடு நேசித்த ஊடகர் ஐயாத்துரை நடேசனின் கூரிய பேனாமுனை எழுத்துக்கள் யாரையெல்லாம் சுட்டியதோ அவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த எழுத்துக்களுக்கு அச்சங்கொண்டு கௌரி நடேசன் என்ற ஜீ நடேசனின் எழுத்துக்களுக்கு இற்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பதாக மட்டக்களப்பின் எல்லை வீதியில் வைத்து துப்பாகி வேட்டுகளால் மரணமென்னும் எல்லையை உருவாக்கி நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களை படுகொலை செய்தனர்.
எந்தச் சந்தரப்பத்திலும் தனது எழுத்துக்கள் யாருக்கும் பணிந்துவிடக்கூடாது என்பதிலும் தனது பயணம் தடம் மாறிவிடவோ மாற்றப்படவோ கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த நடேசன் தான் வாழ்ந்த மட்டக்களப்பு மண்ணையும் மக்களையும் மிகுதியாக நேசித்தவர்.
அதன் காரணமாக அப்பகுதி மக்களின் நிலைப்பாடுகளையும் சரியான சந்தரப்பங்களில் சரியான முறையில் எடுத்தாளுவதை மேற்கொண்ட படியால் பிரதேச வாத சூழ்ச்சியை கருத்தியலாக காவித்திரிந்த பலரின் முகத்திரைகளை தனது எழுத்துகளின் மூலம் கிழித்தெறிந்தார்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஆயுத ஒட்டுக்குழு உறுப்பினர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் மிக நீண்ட பட்டியலில் ஐயாத்துரை நடேசன் அவர்களையும் இணைத்துக்கொள்ள செய்தனர்.
நீதியின் பார்வை மக்கிப்போன ஒரு நிகழ்வாக மட்டக்களப்பின் எல்லை வீதியில் துப்பாக்கி ரவைகள் உயிர்குடித்த நடேசனின் வெற்றுடல் கிடத்தப்பட்டிருந்த காட்சியை கண்ணுற்றவர்களின் இதயங்கள் யாவும் ஒரு கணம் குருதிக்கண்ணீர் வடித்தன.
நடேசனின் எழுத்துக்களை வாசித்த ஒவ்வொரு வாசகனுக்கும் இவ் உணர்வு நிச்சயமாக இருந்தே இருக்கும். இந்த ஊடகப்படுகொலையை வன்மையாக கண்டித்த தமிழர் தேசம் அமரர் ஐயாத்துரை நடேசன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என்ற தமிழர் தேசத்தின் உயர் கௌரவத்தை வழங்கியது.
இன்று 19 ஆண்டுகள் கடந்தும் நடேசன் உட்பட இலங்கை அரச ஆதரவு ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொருவருக்குமான நீதியும் காணல் நீராகவே காட்சி தருகிறது.
இலங்கையில் நீண்டு தொடரும் ஊடகவியலாளர்களுக்கெதிரான வன்முறைகளையும் ஆட்கடத்தல் படுகொலைகளும் என்று தீரும் என்பது விடை காண முடியாத ஒரு விடுகதையே.
இன்றைய நாளில் ஒரு செய்தியாளராக கடினமான காலங்களிலும் கூட காத்திரமான ஊடகப் பணியாற்றிய எமது ஊடக நண்பர் ஐயாத்துரை நடேசன் அவர்களை ஐபிசி தமிழ் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது.
நெஞ்சுரத்தோடு தனது நேரிய ஊடகப் பணியை சீராக மேற்கொண்ட நடேசன் கொல்லப்படும் வரை இலங்கையின் பிரபல செய்தி ஊடகங்களின் மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளராகவும், அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியதோடு எமது ஐபிசி தமிழ் வானொலியின் இலங்கைக்கான செய்தியாளராகவும் எம்மோடு மிக நெருங்கிப் பயணித்தவர்.
அன்றைய காலங்களில் தமிழ் தேசியம் சார்ந்த நிலைப்பாட்டையும் கள நிலவரங்களையும் சர்வதேச ரீதியில் எடுத்துச்சென்ற எமது ஊடக குழுமத்தின் உண்மைக்கான ஊடகப் பணியில் மிக முக்கியமான பங்களிப்பினை நல்கிய ஒரு ஊடகராக நாட்டுப்பற்றாளர் நடேசனை நாம் நினைவுகூருவது சாலப்பொருந்தும்.