தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த யாழ்.மாணவன் தொடர்பான பதிவு - ஆளும்தரப்பு கடும் கண்டனம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் 30 வருடத்திற்குப் பின்னர் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவன் தேசியரீதியில் முதலிடத்தைப் பிடித்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அந்த மாணவனது புகைப்படத்துடன் விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளது புகைப்படங்களை இணைத்து சிலர் பதிவிட்டிருப்பதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கண்டித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, இதுபோன்ற செயற்பாடுகள் மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
கணிதப்பிரிவில் முதலிடத்தைப் பெற்ற தனராஜ் என்பவரது புகைப்படத்துடன் இன்று விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைத்தளங்களில் படங்கள் பதிவேற்றப்பட்டதைக் கண்டேன்.
30 வருடப் போரின் பின்னர் கணித பாடத்தில் யாழ்ப்பாணத்தில் முதலிடத்தை மாணவர் ஒருவர் பெற்றிருக்கின்றார். அப்படியான சூழல் உருவாகியிருக்கின்றது. அன்று அரச தலைவராக இருந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போதைய அரச தலைவரான கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் அப்படியான நிலைமைகள் ஏற்படும் வகையிலான சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இதுபோன்ற திறமைசாலிகள் இன்று முன்னிலை வகிக்கின்றனர்'எனத் தெரிவித்தார்.