எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டு: 6 இந்திய மீனவர்கள் கைது(படங்கள்)
எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டு
எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 6 மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய படகு ஒன்றையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று(20) காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினரால் கைது

குறித்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு சிறிலங்கா தலை மன்னாருக்கும் - நாச்சிகுடாவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.
அதில் ஒரு படகில் இருந்த 5 மீனவர்களும் இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்ததையடுத்து படகை சோதனை செய்த சிறிலங்கா கடற்படையினர் இயந்திர கோளாறு உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த படகையும் அதிலிருந்து 5 மீனவர்களையும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தூதர் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகையும் அதிலிருந்த பாலமுருகன், அந்தோணி, தங்கபாண்டி, அஜித், கிருஷ்ணன், மடுகு பிச்சை ஆகிய ஆறு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை


சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் 6 மீனவர்களும் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் ஊடக இலங்கை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.