கிழக்கு மாணவர்களுக்கான சத்துணவு: அரசின் மகிழ்ச்சி தகவல்
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த நடவடிக்கை முறையாக இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (06-08-2025) பிற்பகல் 2.30 மணியளவில் மட்டக்களப்பு (Batticaloa) பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சுகாதார சேவைகள்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளில் அண்மையில் உணவு ஒவ்வாமையினால் 70 பாடசாலை மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
முற்றாக தடை
இது குறித்து பெற்றோர்களுக்கும்,பொதுமக்களுக்கும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் தெளிவூட்டுவதற்காக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ.உதயகுமாரின் ஏற்பாட்டில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பாடசாலைகளுக்கு உணவு வழங்குதலில் பிளாஸ்டிக் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு அருகாமையில் இருப்பவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள்
உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு கொண்டு வந்து வழங்க முன்பு, அதனை பாடசாலை உணவுக்குழு கட்டாயம் கண்காணிக்க வேண்டும் எனவும் இதனை பொதுசுகாதார பரிசோதகர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு தயாரிக்கும் ஒருவர் ஒரு பாடசாலைக்கு மாத்திரமே உணவு வழங்குதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதுடன் 200 மாணவர்களுக்கு மாத்திரமே அவை வழங்க வேண்டும் எனவும் இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சாமினி ரவிராஜ், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உணவு தயாரித்து வழங்குனர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், சுகாதார சேவை திணைக்கள உயர் அதிகாரிகள் என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 


 
                                        
                                                                                                                         
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        