ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு : அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள ரவிகரன் எம்.பி
2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை வெகு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் குறித்த கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் 2000 பேர் அளவில் இறந்து விட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (21.03.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண ஓய்வூதியர் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் அமைப்பு தங்களுக்குரிய குறைகளை தெரிவித்துள்ளனர்.
அதாவது 2016 - 2019 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 2020.01.01 இல் வழங்குவதற்குரிய ஓய்வூதியமானது நாட்டின் நிலைமை காரணமாக கோட்டாபய அமைச்சரவையினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சார்பான ஓய்வூதியர் சங்கத்தினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.
இப்போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்போது அவ்வாறு போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவு தொழிற்சங்கங்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கையூட்டி வந்தனர்.
2016 -2019 பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.
2020 இல் கிடைக்க வேண்டிய கொடுப்பனவு 2025 வரை ஐந்தாண்டுகளாக காத்திருந்தவர்களுக்கு அந்தக் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக 2027 வரை வழங்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இக்கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் 2000 பேர் அளவில் இறந்து விட்டனர். இந்த நிலையில் தற்போதைய அரசும் ஓய்வூதியர் வாழ்வுக் காலம் பற்றிச் சிந்திக்காது கொடுப்பனவை வழங்குவதை மேலும் மூன்றாண்டுகளுக்கு பிற்போடுவதாக அவர்கள் கவலையடைகின்றனர்.
இந்த நிலையில் அந்தக் கொடுப்பனவுகளை வெகு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரையும் சபாநாயகரையும் கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்