ஒடுக்குமுறைக்கு எதிராக உங்களுடன் எப்போதும் இருக்கிறேன் - சிங்கள எழுத்தாளர் நெகிழ்ச்சி
தமிழர்கள்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக எப்போதும் உங்கள் பக்கமே நான் இருக்கிறேன் என்று சிங்களக் கவிஞர் திலீனா வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற கவிஞர் தீபச்செல்வனின் நினைவில் நாடுள்ளவன் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் அவர் கூறுகையில் "உடலால் இன்று உங்களோடு இருக்கிறேன். ஆனால் நீண்ட காலமாகவே உங்களோடும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறும் கனவோடும் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
மனிதநேயப் வெளிப்பாடே
ஒவ்வொரு மனிதனும் வதை, சித்திரவதை இல்லாமல் சுதந்திரமாக மனிதத்தன்மையை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே கனவை சுமந்து நிற்கும் தீபச்செல்வனின் மனிதநேயப் வெளிப்பாடே இன்று என்னை இங்கு அழைத்து வந்துள்ளது.

அந்த கனவின் வெளிப்பாடு தென்னகச் சகோதரத்துவம் மட்டுமல்ல, உலகமெங்கும் மனிதத்தன்மை, சுதந்திரம், நீதி, சமத்துவம் குறித்து மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கும் ஆழமான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், வடக்கின் சகோதரத்துவம் தசாப்தங்களாக தன் ஒடுக்குமுறையை எதிர்த்து சுதந்திரத்திற்காக நடத்திய போராட்டத்தைவிட, எங்கள் அரசியல் பண்பாட்டின் மனசாட்சியை இன்னும் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்க தீபச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.
மனிதத்தன்மை, சுதந்திரம், வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வாழும் உரிமைக்காக உயிரையே பணயம் வைத்து கருத்து வெளிப்படுத்திய தீபச்செல்வனின் கவிதைகள் எவ்வளவு ஆழமாக எங்களை பாதிக்கின்றன என்பதைச் சொல்ல, அவரை இந்த மண்ணில் பிறந்த மிகச் சிறந்த மனிதநேயக் கவிஞர்களில் ஒருவராக நான் அழைக்க விரும்புகிறேன்..." என்றும் அவர் கூறினார்.
ஐபிசி தமிழ் மற்றும் றீச்சாவின் நிறுவனர்
தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தலைமை வகித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஐபிசி தமிழ் மற்றும் றீச்சாவின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் மற்றும் சிங்கள எழுத்தாளர் திலீனா வீரசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
நூலினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட ஐபிசி தமிழின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். முதன்மைப் பிரதியை மூத்த போராளி பசீர் காக்கா ஆகியோர் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் விமர்சனவுரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வேல். நந்தகுமார் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் முன்னாள் போராளிகள், படைப்பாளிகள், கலைஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





