ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்! மஹிந்த அமரவீர வெளியிட்டுள்ள தகவல்
ஐந்து சதவீத வாக்குகள் கூட இல்லாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தேசிய குற்றம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இந்த முறை மாற்றப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது வேட்பாளருக்கு 5% வாக்காளர்கள் இல்லை என்றால் பிணைத் தொகை 25 இலட்சமாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அம்பலாந்தோவில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ''இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால் இரண்டு அல்லது மூன்று பிரதான வேட்பாளர்களைத் தவிர மற்ற வேட்பாளர்களுக்கு குறைந்தது இரண்டு சதவீத வாக்காளர்கள் இல்லை. சிலருக்கு குடும்ப ஓட்டு கூட கிடைக்காது.
குறைந்தபட்சம் ஐந்து சதவீத வாக்காளர்கள் இல்லாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தேசிய குற்றமாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிணைத் தொகையை கணிசமாக அதிகரிப்பது குறித்தும் அமைச்சரவை என்ற ரீதியில் கலந்துரையாடினோம்.
தேசிய குற்றம்
05 வீத வாக்காளர்கள் கூட இல்லாத கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் ஏற்படும் வள விரயத்தை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும், அந்த சட்டங்களை தயாரிப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்றே தோன்றியது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, ஒவ்வொரு கூடுதல் வேட்பாளருக்காகவும் நாடு 200 மில்லியன் ரூபாவை கூடுதலாகச் செலவிட வேண்டியுள்ளது.உண்மையில், இந்த நிலைமை ஒரு தேசிய குற்றம்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |