இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் : வெளியான அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தொடர்பாக சமூகத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விசேட பரிசோதனை
"இலங்கைக்கு தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்யும் போது, சுங்கச்சாவடியில் உள்ள உணவு கட்டுப்பாட்டு பிரிவின் உணவு பரிசோதகர்களால் விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் RBD எண்ணெய், சாதாரண தேங்காய் எண்ணெயாக விற்பனை செய்யும் திறன் கொண்டது. 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டு தரநிலை ஆணைகள் தொடர்பான தரநிலைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் நாட்டில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதற்கு சட்டத் தடை ஏதும் இல்லை.
தேங்காய் எண்ணெயின் தரம்
அத்துடன், இலங்கைக்கு தேங்காய் எண்ணெயை கொண்டு வரும் போது உணவு பாதுகாப்பு பிரிவின் உணவு பரிசோதகர்கள் மற்றும் இலங்கை தர நிர்ணய பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து இந்த தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்" என்றார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயை உள்ளூர் தேங்காய் எண்ணெயாக விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |