சுற்றுலா பயணிகளால் அழிவடையும் சிகிரியா..!
சிகிரியாவில் பாதுகாக்கப்பட்டு வரும் பழங்காலச் சுவர்களில் 70 வீதமானவை தற்போது அழிந்துள்ளதாக சிறிலங்கா மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சிகிரியாவில் நடந்து செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசியர். காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அண்மை நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ள நிலையில், உலகின் எட்டாவது அதிசயமாக திகழும் சிகிரியாவை நாளாந்தம் பார்வையிட ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்பினர் விஜயம் செய்வதாக சிறிலங்கா மத்திய கலாசார நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
புணரமைக்கும் பணி
இந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட பழங்காலச் சுவர்களில் 70 வீதமானவை அழிந்துள்ளதாக நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசியர். காமினி ரணசிங்க கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த பாதையில் நடப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சுற்றுலாப் பயணிகள் அதனை பொருட்படுத்தாது செல்வதாகவும் இதனை புணரமைக்கும் பணிகளுக்காக வருடாந்தம் மில்லியன் கணக்கான ரூபா செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நெகிழி எனப்படும் பிளாஸ்ரிக் கழிவுகள் சிகிரியா பகுதியில் அதிகளவில் வீசப்படுவதால் குறித்த பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காமினி ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.