யாழில் இளையோருக்கு இலவச கணணி கற்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் "என் கனவு யாழ்" அறக்கட்டளையுடன் இணைந்து கணணி கற்கையை இலவசமாக இளையோருக்கு வழங்குவதற்காக "டிபி ஐடி கம்பஸ்" எனும் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் (22) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி சட்டநாதர் சிவன்கோவில் முன்பாக அமைந்துள்ள சங்கிலியன் மன்றத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தகவல் கணனி கற்கை மீது ஆர்வமும் தேடலும் உள்ள மாணவர்கள் மற்றும் இளையோரை மையப்படுத்திய இக்கற்கை நெறியை முற்றிலும் இலவசமாக வழங்க என் கனவு யாழ் அறக்கட்டளையும் டிபி எடியுகேசன் அறக்கட்டளையும் கைகோர்த்துள்ளன.
பாடத்திட்டங்கள்
இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட சுமார் 1200 மாணவர்கள் வருடாந்தம் பயன்பெறும் வகையில் மாவட்டத்தின் முதலாவது My Dream Academy ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இக்கற்கைநெறியானது, Code.org, Thunkable, Microbit, Pictoblox, Glitch உள்ளிட்ட தளங்களோடு இணைந்து உருவாக்கப்பட்ட தரம் வாய்ந்த 300க்கு மேற்பட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
மாணவர்கள் ஒவ்வொரு 8 பாடத்திட்டங்களையும் நிறைவு செய்யும்போது சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் கல்வியில் முதலிடம்
இக்கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, இலங்கையின் மொரட்டுவை பல்கலைக்கழகம், ருகுணு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தப்படும் கற்கைநெறிகளை தொடரும் வாய்ப்புகள் இதனூடாக வழங்கப்படவுள்ளன.
நாடுமுழுவதும் அடுத்தாண்டுக்குள் 1 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தினூடாக ஒவ்வொரு மாணவரும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இக்கற்றைநெறியை முற்றிலும் இலவசமாக தொடரவுள்ளார்கள்.
மீண்டும் கல்வியில் முதலிடம் என்ற எமது இலக்கை நோக்கிய பயணத்தின் மிக முக்கியமான தடமாக, யாழ் மாவட்ட மாணவர்களை தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சியடைந்தவர்களாக உருவாக்கி அதனூடாக சர்வதேச தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் எனது கனவு நிறுவகமொன்றை நாம் ஆரம்பிக்கவுள்ளோம் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
