மத்திய மாகாண பாடசாலைகள் மூடுவது தொடர்பான சிறப்பு அறிவிப்பு
மத்திய மாகாணத்தில் நிலவும் காலநிலைக்கு ஏற்ப பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் சுரங்க பெர்னாண்டோ, ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடும் மழை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் சுரங்க பெர்னாண்டோ
இதன்படி, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்துரையாடி, நிலைமைக்கு ஏற்ப பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவை ஏற்படின், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் 38 பாடசாலைகள் நேற்று (21) மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாவலப்பிட்டி பகுதியில் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 66 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்கள் தற்போது இம்புல்பிட்டிய கல்லூரியிலும், அப்பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |