திசை திருப்பப்படும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை! கர்தினால் மல்கம் குறித்து பரவும் வதந்தி
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது.
மேற்படி அறிவிப்பை கொழும்பு பேராயத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி விடுத்துள்ளார்.
இந்தத் தவறான குற்றச்சாட்டுகள் முதன்முதலில் 2020ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அளித்த வாக்குமூலத்தின் மூலமே சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திக்குறிப்பு
எனினும், இக்கூற்று முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்பதை கொழும்பு பேராயத்தின் மூன்று துணை ஆயர்களால் கையொப்பமிடப்பட்டு, 2020 செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்ததாகவும் அருட்தந்தை சிரில் காமினி கூறியுள்ளார்.

அதன்படி, அன்றைய காலகட்டத்தில் நாட்டின் உயர்மட்டப் பாதுகாப்புப் படைகள் அனைத்திற்கும் இந்த ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததே தவிர, கர்தினாலுக்கு இதுபற்றி தெரிந்திருந்தது என்ற சமூக ஊடகப் பரப்புரைகளில் எந்தவொரு உண்மையும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரமற்ற வதந்தி
இந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை வெளிக்கொணரவும், அதன் உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முறையான விசாரணைகளைத் திசைதிருப்பும் நோக்கத்துடனேயே இத்தகைய பொய்ப் பிரசாரங்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சமூக ஊடகங்களில் உலா வரும் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |