யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி: விளக்கமளித்த அரசாங்கம்
யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 8.48 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டுவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் (Karunanathan Ilankumaran) தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 459 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவு செய்யப்பட்டு தலா 25,000 ரூபாய் வீதம் மொத்தமாக 36 கோடியே 14 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் வெளியான அடிப்படையில் குறித்த எண்ணிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ''யாழ் மாவட்டத்தில் 213,391 குடும்பங்களைச் சேர்ந்த 634,904 அங்கத்தவர்கள் வசிக்கும் நிலையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 16, 918 குடும்பங்களைச் சேர்ந்த 53,828 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழில் 59 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில் இப்போது 8 முகாம்களில் மக்கள் தங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளதாக பலர் கதைக்கின்றனர். அனைத்துப் பிரதேசத்திற்கும் ஜனாதிபதி சமமாக நிதி ஒதுக்கியுள்ளார். அந்தவகையில் சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் யாழ்ப்பாணத்தில் 8.48 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 50,752 குடும்பங்களைச் சேர்ந்த 135,000 மக்கள் தொகையை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் 8,778 குடும்பங்களைச் சேர்ந்த 28,093 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் மொத்த சனத்தொகையில் 20.8 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் ஒரே விதமாக ஜனாதிபதி சேவை செய்கின்றார். நாங்கள் மக்களின் பணத்தை ஒரு சதத்தையேனும் வீண்விரயமாக்கவில்லை. ”என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |