இலங்கை தொடர்பான ஐ நா மனித உரிமை பிரேரணையை நிராகரித்தது அநுர அரசு
புதிய இணைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல்வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என கூறினார்.
எனினும்உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை பேரவையுடனும்,வழமையான மனித உரிமை பொறிமுறையுடனும்,தொடர்ந்தும் ஒத்துழைப்பு அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது என குறிப்பிட்டார்.
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்,தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜிதஹேரத் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஜெனீவாவிற்கு தெரியப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது,மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனினும் இதற்கு காலம் தேவை,நாளை ஜெனீவாவில் இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தை நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எனும் தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசின் நிலைப்பாட்டை
2024.09.09 தொடக்கம் 2024.10.11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath) சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, இலங்கை அரசின் நிலைப்பாட்டை கீழ்க்காணும் வகையில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன்
உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம்
குறித்த தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |