தமிழ் மொழியைப் புறக்கணிக்கின்றதா அநுர அரசு : சபையில் சத்தியலிங்கம் காட்டம்
இலங்கையின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதா என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam) கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் இந்த திட்டம் பற்றிய செயலமர்வில் பயன்படுத்தப்பட்ட முன்வைப்பில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டு ஏனைய இரண்டு மொழிகளுமே உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (22) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் எங்களுடைய நாட்டுக்கு தேவையான ஒன்று. இதனூடாக பல விடயங்கள் கிளீன் செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
இந்த நாட்டினுடைய அரசியல், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு போன்ற விடயங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு நல்ல திட்டங்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்.
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் பற்றிய ஒரு Power point Presentation ஐ பார்க்க கூடியதாக இருந்ததது. அதில் நல்ல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக என்னவோ இரண்டு மொழிகளில் தான் அது தயாரிக்ப்பட்டிருந்தது. தமிழ் மொழியைக் காணவில்லை. தயவுசெய்து அந்த திட்டத்திலே தமிழ் மொழியையும் உள்ளடக்குங்கள்.” என கேட்டுக்கொண்டார்.
இதேவேளை குறுக்கிட்ட பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake), கிளீன் சிறிலங்கா வலைத்தளத்தில் தமிழ் மொழியும், சிங்கள மொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை எனவும் அந்த முன்வைப்பு எங்கே நடந்தது என்பதை தனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் பௌத்த சாசன அமைச்சை மதநல்லிணக்க அமைச்சு என மாற்றி எல்லா மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என சத்தியலிங்கம் வலியுறுத்தினார்.
பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட வேண்டிய உணுவுப் பொருட்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |