ஜப்பானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரவின் அடுத்த நகர்வு
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் டோக்கியோவில் ஜப்பானில் உள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க உள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள ஜனாதிபதி நேற்று (27) ஜப்பான் வந்தடைந்தார்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் அகியோ இசோமாதா, ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகள் ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றனர்.
தொடருந்து பயணம்
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றால் நேற்று (27) ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற “எக்ஸ்போ 2025” நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.
நேற்றைய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, இன்று (28) காலை ஷின்-ஒசாகா தொடருந்து நிலையத்திலிருந்து டோக்கியோவுக்குப் புறப்பட்ட ஜனாதிபதி, இன்று பிற்பகல் டோக்கியோவில் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்க உள்ளார்.
இருதரப்பு கலந்துரையாடல்கள்
தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜப்பான் பேரரசர் நருஹிட்டோவை சந்திக்க உள்ளார், மேலும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
டோக்கியோவில் இலங்கை மற்றும் ஜப்பான் வர்த்தக சபைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலங்கை முதலீட்டு மன்றத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகள் உள்ளனர்.
