காசா மக்களின் அழுகுரல் கேட்ட அநுரவிற்கு தமிழர்களின் குரல் கேட்கவில்லையா : சபா குகதாஸ் கேள்வி!
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத் தொடரில் பங்குபற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அங்கு ஆற்றிய உரை குறித்து வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அநுரவின் உரை “ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி என்ற பழமொழிக்கு ஒப்பானதாக அமைந்துள்ளது“ என சபா குகதாஸ் (Saba Kugathas) சாடியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சொந்த நாட்டில் சகோதர இன மக்கள் 76 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான படுகொலைகளுக்கு உள்ளாகி 2009 ஆண்டு மிகப் பெரிய இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டு 16 ஆண்டுகளாக நீதி வேண்டிய போராடும் அவலக்குரல் ஜனாதிபதி அநுரவின் காதில் கேட்கவில்லை.
கண்டு கொள்ளாத ஜனாதிபதி
பல ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உண்மையாக பாதிக்கப்படும் காசா மக்களின் அழுகுரல் தனது காதில் கேட்ட வண்ணம் உள்ளதாக உரையாற்றியுள்ளார்.
பலஸ்தீன மக்களின் உரிமைக்காக பலஸ்தீனம் என்னும் தனி நாட்டை இலங்கை அரசாங்கம் அங்கீகரிப்பதாக ஜனாதிபதி அறிவித்தமையை ஈழத் தமிழர்களும் வரவேற்கின்றனர்.
சம நேரத்தில் சகோதர இனம் 76 ஆண்டுகளாக தமது மறுக்கப்பட்ட உரிமைக்காக சமஸ்டித் தீர்வு கோரி ஐனநாயக முறையில் போராடுகின்றனர்.
அந்த மக்களின் அபிலாசையை பிரதிபலிக்கும் வகையில் இதுவரை ஐனாதிபதி கண்டு கொள்ளாதவர் போல இருந்து கொண்டு சர்வதேச அரங்கில் தத்துவம் பேசுகின்றார்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
